திருக்கோயில் காட்சிகள்

சனி, 3 அக்டோபர், 2009

அழகன் குளத்தானே ஆடுகநீ ஊஞ்சல்

கன்னலொடு நெல்விளையும் காவிரியின் ஓரம்
கண்வளரும் சிறிரங்கா கருணைபொழி தேவா
மன்னவராம் பாண்டவர்க்கு மாமனென ஆனாய்
மாபெரிய விசயனுக்கு மைத்துனனும் ஆனாய்
உன்னழகைக் கண்டுருகி உலங்களித்த ராதை
உள்ளத்தில் ஏறியது காதலெனும் போதை
கன்னியவள் உள்ளத்தில் ஆடுகநீ ஊஞ்சல்
கவினழகன் குளத்துரைவாய் ஆடுகநீ ஊஞ்சல் .
1

கஞ்சனாம் மாமனுக்கே காலனென வந்தாய்
கையிலொரு குழலோடு கரவைகள்பின் சென்ற
மஞ்சுடைய நிறத்தானே மலையப்ப சாமி
மணிவயிர மாலையுடன் துளாயணிந்த மார்பா
தஞ்சமென்ற பாண்டவர்க்குத் தேரோட்டி யாகித்
தான்காவல் என்றான தருமதுரை நீயே
அஞ்சிலம்பின் ஒலிமகளிர் ஆட்டிடவே ஊஞ்சல்
அழகன்நற் குளத்துறைவாய் ஆடுகநீ ஊஞ்சல் .
2

மாணிக்கத் தொட்டிலிலே மகவாகி ஆடும்
மலர்முகத்தாய் வேய்ங்குழலில் கானத்தை மீட்டி
ஆணிப்பொன் முத்தாரம் அணிகின்ற மார்பா
அமர்க்களத்தில் விசயனுக்குச் சாரதியாய் வந்து
பேணிக்கை கொடுத்திட்ட பெருமாளே தங்கம்
பிடித்திட்ட ஊஞ்சலிலே வந்தமர்ந்த செல்வா
காணிக்கு மன்னவனே ஆடுகநீ ஊஞ்சல்
காகுத்தன் எனவந்தாய் ஆடுகநீ ஊஞ்சல்.
3

அம்பவளக் கொம்பனையார் ருக்குமணி பாமா
ஆயிழையார் இருவருக்கும் வாய்த்தமண வாளா
உம்பவள வாயூதும் குழலிசையைக் கேட்டே
உவக்கின்ற கோபியர்தம் உயிரெனவே ஆனாய்
உம்பருக்கு நாயகனே உனையன்றித் தெய்வம்
உண்டிங்கு வேறென்றே உரைப்பவரும் யாரே
செம்பவளக் கையானே ஆடுகநீ ஊஞ்சல்
சித்திரத்தேர் வலவாநீ ஆடுகவே ஊஞ்சல்.
4

மார்கழியில் திருப்பாவை மகளிரெல்லாம் ஓத
மங்கலச்செந்த் தமிழாலே எழுதிவைத்த ஆண்டாள்
சீர்கொழிக்கச் செப்பியவாய் இதழமுதம் உண்டு
சிந்தையெல்லாம் தான்மயங்க வீற்றிருக்கும் செல்வா
தேர்செலுத்திப் பாண்டவர்க்கு வாழ்வளித்த உன்றன்
திருவடியை மறவாமல் வணங்குகிறோம் அய்யா
ஆர்கலியின் மேல்துயில்வாய் ஆடுகநீ ஊஞ்சல்
அழகன்நல் குளத்திறையே ஆடுகநீ ஊஞ்சல்.
5

மானோடு புலிசேர்ந்து மயங்கிவிளை யாடும்
மலைபொருந்து வேங்கடமும் மகிமைபெற நின்றாய்
ஆனோடு பழகிவரும் ஆயர்குலக் கண்ணா
அமர்வெல்லப் பாண்டவர்க்கே அச்சாணி ஆனாய்
கானேகும் பாண்டவரைக் காத்தவனும் நீயே
கடைக்கண்ணால் அருள்காட்டிக் களித்தவனும் நீயே
வானோடு நிலம்படைத்தாய் ஆடுகநீ ஊஞ்சல்
வையமுடன் உலகளந்தாய் ஆடுகநீ ஊஞ்சல்.
6

சங்குடைய கையனே சாரங்க வில்லாய்
சக்கரத்தாய் திருமாலே சங்கடங்கள் தீர்ப்பாய்
பங்கிழந்த பாண்டவர்கள் பூமிபெற வைத்தாய்
பார்த்தனுக்குச் சுபத்திரையைச் சேர்த்துமணம் செய்தாய்
கங்கைவரு புனல்தழுவும் காலுடைய கண்ணா
கலைபொலிந்த தேவகிக்கு வாய்த்தமகன் ஆன
தங்கமே மங்கலமாய் ஆடுகநீ ஊஞ்சல்
தாமரைப்பொற் சேவடியாய் ஆடுகநீ ஊஞ்சல்.
7

வானமரர் வாழ்வுபெற வல்லரக்கர் தம்மை
வதைத்தவனே காகுத்தா கருணைவடி வாகித்
தேனமரும் சோலைபுடை சூழ்ந்திருக்கக் காணும்
திருப்பதியாம் வேங்கடத்தில் அலர்மேலு மங்கை
தானமர்ந்த மார்புடையை தரணிதனில் மாந்தர்
தனைக்காக்கும் திருமலையாய் தண்கமலக் கண்ணா
ஆனோடு பின்சென்றாய் ஆடுகநீ ஊஞ்சல்
அரவணைமேற் கிடந்தவனே ஆடுகநீ ஊஞ்சல்.
8

வேதமெல்லாம் தொழுதேத்த வேற்றவர்க்கு முன்னே
வியன்தூதாய் நடந்தவனே வேல்விழிகொள் ஆண்டாள்
மாதவனே வேண்டுமென மணக்கவரு நாளில்
மாலையிட்ட ரங்கமன்னார் என்றுன்னைப் போற்றி
யாதவர்கள் குலந்துதிக்க வந்தபத்ம நாபா
யாதவர்தம் குலங்காக்கும் திருவரங்க நாதா
மாதவர்கள் கோமகனே
ஆடுகநீ ஊஞ்சல்
மாமுகில்போல் மேனியனே ஆடுகநீ ஊஞ்சல் .
9

பாய்பரிகள் பூட்டியதேர் ஓட்டியவா அன்று
பாண்டவர்க்குக் காவலென நின்றசீனி வாசா
மாயவனாய் உலகளந்த மலரடிகள் வாழ்த்தி
மகிழ்கின்றோம் மழைமுகிலே நூற்றியெட்டுத் தேசம்
போயமர்ந்த புண்ணியனே புகழ்பத்ம நாபா
பொற்கருடக் கொடியுடையாய் போற்றுகுழல் ஊதி
ஆயர்களை மகிழ்வித்தாய் ஆடுகநீ ஊஞ்சல்
அழகன்நற் குளம்அமர்ந்தாய் ஆடுகநீ ஊஞ்சல்.
10
- காப்பியக்கவிஞர்-
கவிஞர்கோ. நா .மீனவன் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக