திருக்கோயில் காட்சிகள்

திங்கள், 5 அக்டோபர், 2009

அழகனுக்குப் பல்லாண்டு

மைவரையான் மரகதத்தான் மனித்துளவத் தாருடையான்
ஐவரையும் தான்காத்த அரவணையான் திருமகளைத்
தைவந்த கரதலத்தான் தண்கமலத் தாளுடையான்
கைதொட்ட குழலுக்குக் காலமெல்லாம் பல்லாண்டு . 1

விற்புருவ வதனத்து வித்தகியாம் ஆண்டாள்கை
பற்றியவன் பரந்தாமன் பாவியாம் கம்சனுடன்
மற்போர் உடற்றியவன் மல்லாண்ட தோளுடையான்
அற்புதம்செய் கண்ணனுக்கே ஆயிரமாம் பல்லாண்டு . 2

வலம்படைத்த திருவாழி வலத்திருக்க வாய்ஊதி
நலம்பெற்ற திருச்சங்கம் நமக்கென்றே இடமிருக்கக்
குலம்போற்றும் அழகன் குளத்தமர்ந்த பெருமாளே
மலம்போக்கி வாழ்த்தருள்க மாதவனே பல்லாண்டு . 3

வாரனத்தைத் தான்மாய்த்து வருபுள்ளின் வாய்கீண்டான்
ஆரணத்தின் பொருளானான் அமரருக்குத் துணையானான்
தோரணங்கள் தானிலகும் துவாரகைக்கு முதலானான்
காரணமாய்த் தானான கண்ணனுக்குப் பல்லாண்டு . 4

தண்ணார் நறுந்துளவத் தாருடையான் செங்கமலக்
கண்ணாளாம் கோதைக்குக் கணவனாய் ஆழ்வார்தம்
பண்ணாரும் பாசுரத்தேன் பருகிக் களித்தபிரான்
விண்ணகரம் பலகண்ட வேந்தனுக்குப் பல்லாண்டு . 5

கோதை உடனாய சந்தான கோபாலன்
கீதை அருச்சுனனைக் கேட்கவைத்த பரந்தாமன்
கோதிலா நல்லழகன் குளத்தமர்ந்த கோவலவன்
சீதமுகில் வேங்கடத்துச் செல்வனுக்குப் பல்லாண்டு . 6

முத்துக் கருப்ப முகுந்தரவர் தங்குலத்தின்
வித்தாய் விளங்கியவன் வேதப் பொருளானான்
பத்தாம் அவதாரம் படைத்தபிரான் கோகுலத்தில்
மத்தால் அடியுண்ட மாயவனே பல்லாண்டு .
7

ஆளானேன் உனக்கடியேன்ஆனபத்ம நாபன்நான்
தாளைப் பிடித்துத் தவங்கிடந்தேன் எம்குலத்தை
ஆளாக்க வேண்டுமென அனவரதம் வேண்டியவர்
தோளுக்குத் துனையாகத் துலங்கிடுமால் பல்லாண்டு . 8

சீர்பூத்த எங்களது சேதுமன்னர் சீமையிலே
கார்பூத்த தாமரைபோல் காணுமெழிற் கண்ணுடையாய்
பார்வாழத் திருப்பாவை பாடினாள் கரம்பற்றி
ஊர்வாழ ஈரடியால் உலகளந்தாய் பல்லாண்டு . 9

படங்கொண்ட பாம்பணையாய் பாற்கடலின் நாயகனே
மடங்கொண்ட கௌரவரின் மதமடக்கிப் பாண்டவர்க்கே
இடங்கொடுத்தாய் எழிலழகன் குளமிருக்கும் எம்மானே
திடங்கொண்ட தோளுடைய திருப்பதியே பல்லாண்டு . 10

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக