திருக்கோயில் காட்சிகள்

திங்கள், 5 அக்டோபர், 2009

அழகன் குளத்துக் கண்ணனின் அருள் போற்றும் பாசுரங்கள்

அழகன் குளத்து மணவாளன்

தென்புதுவைப் பட்டர்பிரான் வளர்த்த செல்வத்
திருமகட்கு மணவாளன் திருவாழ் மார்பன்
மன்பதையை
வாய்வழியே தாய்க்குக் காட்டி
மகிழ்வித்தோன் கோகுலத்தின் மானம் காத்தோன்
அன்புமனக் கோபியர்கள் கொஞ்ச வந்த
அழகுதிருப் பதிப்பெருமாள் சேது நாட்டோர்
இன்பமுற எழிலழகன் குளத்தை நாடி
இடங்கொண்டான் இவனடிகள் ஏத்தலாமே .
1

பச்சைநிறப் புல்வெளியும் கழனி நாற்றும்
பச்சிலையும் போல்மேனிப் பவள வாயன்
செச்சையணி முருகனுக்குச் சிறந்த மாமன்
சீருந்தித் தாமரையில் அயனை ஈன்றோன்
நச்சரவின் தலையாடி நம்மைக் காத்தோன்
நல்லழகன் குளம்தேடி அமர்ந்த நம்பி
இச்சையுடன் வணங்குபவர் இல்லம் தேடி
இருந்தருள்வான் இவனடிகள் ஏத்தலாமே .
2

கோவலர்தம் திருமனையில் நந்த கோபன்
குலவிளக்காய் வந்தமையால் ஆயர் பாடி
ஆவினங்கள் பால்பொழிய இல்ல மெல்லாம்
அது பெருகிப் பாற்கடலாய் ஆகி நிற்கக்
கோவியர்கள் பண்பாடக் கூடி யாடிக்
குழலூதி மகிழ்வித்த மாயக் கண்ணன்
தேவர்கட்கும் வாழ்வளித்த தெய்வக் கோமான்
தினங்காப்பான் இவனடிகள் ஏத்தலாமே .
3

மாதவனே இவ்வழகன் குளத்து வந்த
மாயவனே வானோடு நிலம ளந்த
யாதவனே பரந்தாமா எங்கள் கோவே
யதுகுலத்துச் சூரியனே நின்னை எண்ணி
மாதவங்கள் செய்பவர்தம் மால கற்றி
மாபெரிய பதமளிக்கும் மாயக் கண்ணா
ஏதவங்கள் செய்தாலும் எம்மைக் காக்கும்
ஏந்தலே நின்னடிகள் ஏத்தலாமே .
4

இம்மையொடு மறுமையிலும் இனித ளிப்பான்
என்றேத்தும் திருப்பதியான் இனிய பாதம்
செம்மைதரும் என்றெண்ணிச் சென்று காணச்
சேர்முத்துக் கருப்பரெனும் முகுந்த ரய்யா
தம்முடைய மனமறிந்த சீனி வாசன்
தானேவந் தவர்கனவில் வேங்க டத்தின்
இம்மண்ணைப் பிடிமண்ணாய் எடுத்துச் சென்றே
என்கோயில் அமையென்றான் அமைத்தார் அன்றே .
5


திருமலையான் ஒருமனதாய் உவந்து வந்தான்
திசைபுகழ்த் திகழ்அழகன் குளத்தன் ஆனான்
வருமக்கள் மூவருடன் கண்ண னுக்கும்
வழங்கினார் ஒருபகுதி ஆஸ்தி என்றே
மருமகனாம் மாரியப்பர் பெற்ற பேரன்
மகிழ்பத்ம நாபருமே மாணிக் கத்தின்
உருவாய்ந்த வேங்கடவன் திருவ டிக்கண்
உள்ளன்பு வாய்த்தவராய் ஒழுக லானார் .
6

தென்னகத்துத் திருப்பதியாய் அன்பர் போற்றத்
திகழ்அரியக் குடித்தலத்தில் கருடப் புள்ளான்
என்னாளும் அருளுதல்போல் இத்த லத்தில்
இருந்தருளைச் செய்கின்றான்
ஆஞ்ச நேயன்
தென்னாங்கூர் திருவரங்கம் முதலாய் உள்ள
திருத்தலங்கள் இருந்தருளும் தேவ தேவன்
எந்நாடும் புகழழகன் குளத்தை நாடி
எழுந்துவந்த இவன்புகழை ஏத்தலாமே .
7

அன்னவயல் சூழ்புதுவை ஆண்டாள் கொண்ட
அழகனிவன் திருவாழி வலத்தே வைத்தான்
மன்னவராம் பாண்டவர்க்காய் ஊது சங்கை
மாறியிடக் கைவைத்தான் சபையிற் கன்னி
தன்னுடைய மானத்தைக் காத்தான் வெற்றி
தான்ஐவர் பெறவைத்தான் கமலத் தாளைப்
பொன்னழகி காதலனைப் புகழ்ந்து வாழ்த்திப்
பொன்வில்லி மைத்துனனைப் போற்று வோமே .
8

திருமழிசைப் பிரான்தமிழைக் கேட்டுப் பின்னே
திகழரவப் பைசுருட்டிச் சென்ற மாயோன்
பெருமழையால் கோகுலமே வாடி டாமல்
பெருமலையைக் குடையாகப் பிடித்த மேலோன்
கருமைபோல் கடல்நிறம்போல் மேகம் போலக்
காண்மெய்யன் கனத்தமலை திருமெய் யத்தான்
இருமையிலும் அருள்சுரக்கும் எங்கள் அய்யன்
இவனடிகள் பவப்பிணிக்கு மருந்த தாமே .
9

கண்ணனையான் காகுத்தன் கரிய நம்பி
காவிரியும் கொள்ளிடமும் கால்தொட் டோடப்
பண் ஒழுகு தமிழ்கொண்டு பாடும் ஆண்டாள்
பத்தினியாய்ச் சேவிக்கப் பாரளந்தோன்
கண் ஒழுகு தமிழ்கொண்டு பாடும் ஆண்டாள்
கைதொழுதார் அவனிருக்கும் திசையை நோக்கி
விண்ணளந்த திருவடியை எண்ணி எண்ணி
வேளைதோறும் தொழுதிடுவார் வெற்றி காண்பார் .
10

அழகனுக்குப் பல்லாண்டு

மைவரையான் மரகதத்தான் மனித்துளவத் தாருடையான்
ஐவரையும் தான்காத்த அரவணையான் திருமகளைத்
தைவந்த கரதலத்தான் தண்கமலத் தாளுடையான்
கைதொட்ட குழலுக்குக் காலமெல்லாம் பல்லாண்டு . 1

விற்புருவ வதனத்து வித்தகியாம் ஆண்டாள்கை
பற்றியவன் பரந்தாமன் பாவியாம் கம்சனுடன்
மற்போர் உடற்றியவன் மல்லாண்ட தோளுடையான்
அற்புதம்செய் கண்ணனுக்கே ஆயிரமாம் பல்லாண்டு . 2

வலம்படைத்த திருவாழி வலத்திருக்க வாய்ஊதி
நலம்பெற்ற திருச்சங்கம் நமக்கென்றே இடமிருக்கக்
குலம்போற்றும் அழகன் குளத்தமர்ந்த பெருமாளே
மலம்போக்கி வாழ்த்தருள்க மாதவனே பல்லாண்டு . 3

வாரனத்தைத் தான்மாய்த்து வருபுள்ளின் வாய்கீண்டான்
ஆரணத்தின் பொருளானான் அமரருக்குத் துணையானான்
தோரணங்கள் தானிலகும் துவாரகைக்கு முதலானான்
காரணமாய்த் தானான கண்ணனுக்குப் பல்லாண்டு . 4

தண்ணார் நறுந்துளவத் தாருடையான் செங்கமலக்
கண்ணாளாம் கோதைக்குக் கணவனாய் ஆழ்வார்தம்
பண்ணாரும் பாசுரத்தேன் பருகிக் களித்தபிரான்
விண்ணகரம் பலகண்ட வேந்தனுக்குப் பல்லாண்டு . 5

கோதை உடனாய சந்தான கோபாலன்
கீதை அருச்சுனனைக் கேட்கவைத்த பரந்தாமன்
கோதிலா நல்லழகன் குளத்தமர்ந்த கோவலவன்
சீதமுகில் வேங்கடத்துச் செல்வனுக்குப் பல்லாண்டு . 6

முத்துக் கருப்ப முகுந்தரவர் தங்குலத்தின்
வித்தாய் விளங்கியவன் வேதப் பொருளானான்
பத்தாம் அவதாரம் படைத்தபிரான் கோகுலத்தில்
மத்தால் அடியுண்ட மாயவனே பல்லாண்டு .
7

ஆளானேன் உனக்கடியேன்ஆனபத்ம நாபன்நான்
தாளைப் பிடித்துத் தவங்கிடந்தேன் எம்குலத்தை
ஆளாக்க வேண்டுமென அனவரதம் வேண்டியவர்
தோளுக்குத் துனையாகத் துலங்கிடுமால் பல்லாண்டு . 8

சீர்பூத்த எங்களது சேதுமன்னர் சீமையிலே
கார்பூத்த தாமரைபோல் காணுமெழிற் கண்ணுடையாய்
பார்வாழத் திருப்பாவை பாடினாள் கரம்பற்றி
ஊர்வாழ ஈரடியால் உலகளந்தாய் பல்லாண்டு . 9

படங்கொண்ட பாம்பணையாய் பாற்கடலின் நாயகனே
மடங்கொண்ட கௌரவரின் மதமடக்கிப் பாண்டவர்க்கே
இடங்கொடுத்தாய் எழிலழகன் குளமிருக்கும் எம்மானே
திடங்கொண்ட தோளுடைய திருப்பதியே பல்லாண்டு . 10

அழகன் அந்தாதி பாசுரம்

அஞ்சன வண்ணன் எங்கள் அழகன்நற் குளத்து வேந்தன்
சஞ்சலப் பகைகள் போக்கும் சக்கரம் ஏந்து கையன்
அஞ்சனை பெற்ற மைந்தன் அனுமனின் தலைவன் ஆனோன்
மஞ்சினை ஒத்த மேனி மாயனே எம்மைக் காப்பாய் 1

காப்பவன் நீயே என்று காலடி பணிந்தோம் வாழ்க்கைத்
தோப்பினைக் காக்கும் தேவா தூயவள் யசோதை மைந்தா
பூப்படர் துளவத் தோளாய் பொன்மகள் சேர்ந்த மார்பா
நாப்படர் தமிழி னாலே நாம்தரும் வணக்கம் ஏற்பாய் 2

பாயெனப் பாம்பு கொண்டாய் பைந்தமிழ் ஆழ்வார் சொல்லத்
தூயவ தொடர்ந்து போனாய் தூதென நடந்து போனாய்
தீயவர் கவுர வர்க்குத் தீயென ஆன தேவா
மாயவா முகுந்தா உன்றன் மலரடி தலைமேற் கொண்டோம் . 3

கொண்டவள் கோதை என்று கும்பிட மகிழும் எங்கள்
கொண்டலே உனது பாதம் கும்பிடல் எமது வேதம்
தண்டலை சூழ்ந்து காணும் தனிப்பெரும் வேங்க டத்தில்
அண்டர்கள் வணங்க நின்ற அமலனே வாழ்த்து வாய்நீ . 4

நீயிலை என்று சொன்னால் நிமலனே உலகம் ஏது
தாயெனப் பூமி தாங்கும் தலைநான் குடைய தேவைத்
தூயதோர் அயனை ஈன்று தொல்புவி காக்க நான்தான்
சேயென வந்த செல்வா சிந்தையில் நிறைந்தாய் அன்றோ . 5

அன்றிலோ(டு) அன்னம் சூழும் அழகிய வாவி வந்து
கொன்றிடும் பாம்பின் மேலே கூத்தினைச் செய்த கோவே
தின்றிடும் வினைகள் நீக்கும் திருப்பதி பெருமாள் உன்னை
இன்றியாம் பணியக் கண்டே இன்னருள் சுரந்தால் என்ன? 6

என்னநாம் செய்வோம் அய்யா நின்னருள் இல்லா விட்டால்
அன்னையாய்த் தந்தை யாகி அனைத்துமாய் ஆன வள்ளல்
பொன்னடி என்றும் எம்மைப் புனிதராய் ஆக்கக் கண்டோம்
மன்னவர் வணங்கும் உன்றன் மலரடி பணியக் காண்பாய் . 7

காண்பதற்(கு) எளியை ஆகிக் கவினுறு துளவத் தொங்கல்
பூண்பவன் உன்னை அந்தப் பொற்றொடிக் கோதை நாச்சி
மாண்பமை மாலை சூட்டி மணந்தவள் கரங்கள் பற்றி
வீண்வினை போக்க வந்த வித்தகன் நாமம் வெல்க . 8

கவின்பெறு சேது நாட்டின் கண்ணென விளங்க வந்தான்
அவனடி வைத்த மண்ணார் அழகன்நற் குளத்தில் வந்து
தவமுடைச் செல்வர் எல்லாம் தாளினைப் பணிதல் வேண்டி
நவமுயர் கோயில் கண்டார் நாரணன் நலமே செய்தான் . 9

செய்யவள் கேள்வன் உன்னைச் சேர்ந்தவர் வீடு பெற்றார்
வெய்யபோர்க் களத்தில் நின்ற பாண்டவர் நாடு பெற்றார்
பொய்யிலா முனிவர் எல்லாம் பொன்னடி காணப் பெற்றார்
அய்யனே உன்னைப் போற்றும் அடியவர் அஞ்சு வாரோ ! 10

அழகன் குளத்து அஞ்சன வண்ணன்

செய்ய திருமாலே சீருடையார் போற்றுதிரு
மெய்ய மலையானே மேன்மைமிகு -வையமொடு
விண்ணளந்த தாளாய் அழகன் குளமுவந்தாய்
எண்ணத்தில் என்றும் இரு.
1

மன்னுதமிழ்க் கோதை மலர்க்கரமாம் தாமரைகள்
தன்னையே பற்றியவா தண்கமலப் -பொன்னாள்
உவந்திருக்கும் மார்பனே உன்னடியே என்றும்
சிவந்திருக்கும் எந்தலைகள் சேர்ந்து
2

காட்டிலே பாண்டவர்க்குக் காவலென நின்றவனே
நாட்டிலே தூதாய் நடந்தவனே -தாட்டா
மரைகாட்டித் தாரணியில் ஆட்கொண்ட மன்னா
விரைவோடு காப்பாய் விழைந்து .
3

முத்துக் கருப்ப முகுந்தர் பணிசெய்ய இவ்வுலகில்
பத்தாம் அவதாரம் பார்த்தவா -கத்தும்
கடல்சேர் அரவணையில் கண்வளர்வாய் நெஞ்சின்
இடரகற்றிக் காக்க எழு .
4

ஆயர் குலத்தமுதே ஆண்டாள் திருக்கேள்வா
தாயாம் யசோதை தான்மகிழச் -சேயாய்
வளர்ந்த திருமாலே வானமுதே வையம்
அளந்தோனே முன்னின் றருள்
5

தேசுடையாய் நெஞ்சில் திருவுடையாய் என்றுமெமை
மாசடையா வண்ணம் மகிழ்ந்தளிப்பாய் -பாசுரங்கள்
போற்றும் திருப்பதியாய் பொன்வண்ணச் சீருடையாய்
ஏற்றுக் களிப்பாய் இனி .
6

பாதங்கள் செய்வார் படவைத்தாய் அன்றிலங்கை
மாதகனம் செய்தான் மனத்திருந்தாய் -நீதான்
அழகன் குளப்பதிமேல் அன்புவைத்தாய் என்றும்
மழைபொழிய வைப்பாய் மனம் .
7


ஆவின் நிறைகாத்த அஞ்சன வண்ணத்தாய்
பாவில் மனம்வைத்தாய் பாற்கடலாய் -சேவேறும்
அண்ணலுக்கு மைத்துனா ஆலிக்கும் ஆழிமழைக்
கண்ணாவுன் காலடியே காப்பு .
8

நெல்லேறும் சோலைத் திருவரங்கம் மேயோனே
சொல்லேரும் பாக்கள் சுவைத்தோனே -வில்லேறும்
தோளானே எங்கள் துணைவா என்றுமுமக்(கு)
ஆளானோம் ஈவாய் அருள் .
9

அன்பாலே வந்தாய் அழகன் குளத்தமர்ந்தாய்
மன்பாரம் தீர்த்திட்ட மாதவா -உன்பாரம்
எம்மையே காப்பாற்றல் என்றிங்கே தாள்பணிந்தோம்
உம்மையன்றி யாரே உளர்?
10

சனி, 3 அக்டோபர், 2009

அழகன் குளத்தானே ஆடுகநீ ஊஞ்சல்

கன்னலொடு நெல்விளையும் காவிரியின் ஓரம்
கண்வளரும் சிறிரங்கா கருணைபொழி தேவா
மன்னவராம் பாண்டவர்க்கு மாமனென ஆனாய்
மாபெரிய விசயனுக்கு மைத்துனனும் ஆனாய்
உன்னழகைக் கண்டுருகி உலங்களித்த ராதை
உள்ளத்தில் ஏறியது காதலெனும் போதை
கன்னியவள் உள்ளத்தில் ஆடுகநீ ஊஞ்சல்
கவினழகன் குளத்துரைவாய் ஆடுகநீ ஊஞ்சல் .
1

கஞ்சனாம் மாமனுக்கே காலனென வந்தாய்
கையிலொரு குழலோடு கரவைகள்பின் சென்ற
மஞ்சுடைய நிறத்தானே மலையப்ப சாமி
மணிவயிர மாலையுடன் துளாயணிந்த மார்பா
தஞ்சமென்ற பாண்டவர்க்குத் தேரோட்டி யாகித்
தான்காவல் என்றான தருமதுரை நீயே
அஞ்சிலம்பின் ஒலிமகளிர் ஆட்டிடவே ஊஞ்சல்
அழகன்நற் குளத்துறைவாய் ஆடுகநீ ஊஞ்சல் .
2

மாணிக்கத் தொட்டிலிலே மகவாகி ஆடும்
மலர்முகத்தாய் வேய்ங்குழலில் கானத்தை மீட்டி
ஆணிப்பொன் முத்தாரம் அணிகின்ற மார்பா
அமர்க்களத்தில் விசயனுக்குச் சாரதியாய் வந்து
பேணிக்கை கொடுத்திட்ட பெருமாளே தங்கம்
பிடித்திட்ட ஊஞ்சலிலே வந்தமர்ந்த செல்வா
காணிக்கு மன்னவனே ஆடுகநீ ஊஞ்சல்
காகுத்தன் எனவந்தாய் ஆடுகநீ ஊஞ்சல்.
3

அம்பவளக் கொம்பனையார் ருக்குமணி பாமா
ஆயிழையார் இருவருக்கும் வாய்த்தமண வாளா
உம்பவள வாயூதும் குழலிசையைக் கேட்டே
உவக்கின்ற கோபியர்தம் உயிரெனவே ஆனாய்
உம்பருக்கு நாயகனே உனையன்றித் தெய்வம்
உண்டிங்கு வேறென்றே உரைப்பவரும் யாரே
செம்பவளக் கையானே ஆடுகநீ ஊஞ்சல்
சித்திரத்தேர் வலவாநீ ஆடுகவே ஊஞ்சல்.
4

மார்கழியில் திருப்பாவை மகளிரெல்லாம் ஓத
மங்கலச்செந்த் தமிழாலே எழுதிவைத்த ஆண்டாள்
சீர்கொழிக்கச் செப்பியவாய் இதழமுதம் உண்டு
சிந்தையெல்லாம் தான்மயங்க வீற்றிருக்கும் செல்வா
தேர்செலுத்திப் பாண்டவர்க்கு வாழ்வளித்த உன்றன்
திருவடியை மறவாமல் வணங்குகிறோம் அய்யா
ஆர்கலியின் மேல்துயில்வாய் ஆடுகநீ ஊஞ்சல்
அழகன்நல் குளத்திறையே ஆடுகநீ ஊஞ்சல்.
5

மானோடு புலிசேர்ந்து மயங்கிவிளை யாடும்
மலைபொருந்து வேங்கடமும் மகிமைபெற நின்றாய்
ஆனோடு பழகிவரும் ஆயர்குலக் கண்ணா
அமர்வெல்லப் பாண்டவர்க்கே அச்சாணி ஆனாய்
கானேகும் பாண்டவரைக் காத்தவனும் நீயே
கடைக்கண்ணால் அருள்காட்டிக் களித்தவனும் நீயே
வானோடு நிலம்படைத்தாய் ஆடுகநீ ஊஞ்சல்
வையமுடன் உலகளந்தாய் ஆடுகநீ ஊஞ்சல்.
6

சங்குடைய கையனே சாரங்க வில்லாய்
சக்கரத்தாய் திருமாலே சங்கடங்கள் தீர்ப்பாய்
பங்கிழந்த பாண்டவர்கள் பூமிபெற வைத்தாய்
பார்த்தனுக்குச் சுபத்திரையைச் சேர்த்துமணம் செய்தாய்
கங்கைவரு புனல்தழுவும் காலுடைய கண்ணா
கலைபொலிந்த தேவகிக்கு வாய்த்தமகன் ஆன
தங்கமே மங்கலமாய் ஆடுகநீ ஊஞ்சல்
தாமரைப்பொற் சேவடியாய் ஆடுகநீ ஊஞ்சல்.
7

வானமரர் வாழ்வுபெற வல்லரக்கர் தம்மை
வதைத்தவனே காகுத்தா கருணைவடி வாகித்
தேனமரும் சோலைபுடை சூழ்ந்திருக்கக் காணும்
திருப்பதியாம் வேங்கடத்தில் அலர்மேலு மங்கை
தானமர்ந்த மார்புடையை தரணிதனில் மாந்தர்
தனைக்காக்கும் திருமலையாய் தண்கமலக் கண்ணா
ஆனோடு பின்சென்றாய் ஆடுகநீ ஊஞ்சல்
அரவணைமேற் கிடந்தவனே ஆடுகநீ ஊஞ்சல்.
8

வேதமெல்லாம் தொழுதேத்த வேற்றவர்க்கு முன்னே
வியன்தூதாய் நடந்தவனே வேல்விழிகொள் ஆண்டாள்
மாதவனே வேண்டுமென மணக்கவரு நாளில்
மாலையிட்ட ரங்கமன்னார் என்றுன்னைப் போற்றி
யாதவர்கள் குலந்துதிக்க வந்தபத்ம நாபா
யாதவர்தம் குலங்காக்கும் திருவரங்க நாதா
மாதவர்கள் கோமகனே
ஆடுகநீ ஊஞ்சல்
மாமுகில்போல் மேனியனே ஆடுகநீ ஊஞ்சல் .
9

பாய்பரிகள் பூட்டியதேர் ஓட்டியவா அன்று
பாண்டவர்க்குக் காவலென நின்றசீனி வாசா
மாயவனாய் உலகளந்த மலரடிகள் வாழ்த்தி
மகிழ்கின்றோம் மழைமுகிலே நூற்றியெட்டுத் தேசம்
போயமர்ந்த புண்ணியனே புகழ்பத்ம நாபா
பொற்கருடக் கொடியுடையாய் போற்றுகுழல் ஊதி
ஆயர்களை மகிழ்வித்தாய் ஆடுகநீ ஊஞ்சல்
அழகன்நற் குளம்அமர்ந்தாய் ஆடுகநீ ஊஞ்சல்.
10
- காப்பியக்கவிஞர்-
கவிஞர்கோ. நா .மீனவன் .

வியாழன், 9 ஜூலை, 2009

செவ்வாய், 5 மே, 2009

சித்திரா பெளர்ணமி விழா



அழகன் குளம் அழகன் சித்திரா பெளர்ணமி விழாக் காண இருக்கிறார். வரும் ஒன்பதாம் தேதி அன்று அதாவது (9,5,2009 ) அன்று அவர் காலையில் வைகை ஆற்றிற்கு குதிரை வாகனத்தில் சென்று சேவை சாதிக்கின்றார், அதன்பின் இரவு கருட வாகனத்தில் அவர் வலம் வருகிறார், சித்திரை நிலவு பெருமை வாய்ந்தது, அதுவும் குறிப்பாக கடலாடி மகிழ்தல் இன்னும் சிறப்பு, அழகன் குளத்திற்குச் சித்திரை மாதக்கடலாடி வரவும்- அழகன் அருள் பெறவும் நாம் அனைவரும் செல்வோம்,

வெள்ளி, 24 ஏப்ரல், 2009

அழகன் குளம் ஒரு வரலாற்றுப் பார்வை

தமிழகத்தின் பண்டைய துறைமுகங்களுள் ஒன்று அழகன் குளம் ஆகும். இதுஇலங்கை நாட்டிற்கு வெகு அருகில் உள்ளது. இவ்வூர் துறைமுகத்தின் வழியாகத்தமிழர்கள் ரோமன் போன்ற பல வெளிநாடுகளுடன் வாணிகத் தொடர்புகொண்டிருந்துள்ளனர்.இங்கு வைகை ஆறு கடலுடன் கலக்கின்றது. அவ்வாறு கலக்கும் வைகைஆற்றுடன் கடலும் இணைந்து ஏறக்குறைய ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை கடல்நீர் இவ்வூருக்குள் ஊடுறுவி வருகின்றது. இதன்முலம் வற்றாத உயிர் நதியாகஇவ்விடத்தில் வைகை ஆறு விளங்குகின்றது.

இயற்கையான துறைமுக அமைப்பைப் பெற்றிருக்கும் இந்த அழகன் குளம்தமிழகத்தின் பழைய துறைமுகங்களின் வரிசையில் குறிக்கத்தக்கதாக உள்ளது. மருங்கூர்ப்பட்டிணம் என்பது இதன் சங்ககாலப் பெயர் ஆகும். நற்றிணையில்இவ்வூர் பற்றிய குறிப்புகளைக் காணமுடிகின்றது.
இது அகழ்வாய்வுக் களமாகவும் விளங்குகின்றது. இங்கு அகழ்வாய்வுசெய்தபோது பழங்காலத் தமிழர்கள் பயன்படுத்திய மண்பானைகளின்சிறுபகுதிகளான ஓடுகள், மணிகள், வெளிநாட்டுக் காசுகள் போன்றனகிடைத்துள்ளன.பானை ஓடுகளில் தமிழில் எழுத்துக்கள் காணப்படுகின்றன. இவ்வகைஎழுத்துக்கள் முதல் நூற்றாண்டைச் சார்ந்தன என்று ஆராய்ச்சியாளர்கள்கருதுகின்றனர். மேலும் வெளிநாட்டுப் பெண்களின் கைரேகைகள் முதலியனவும்தென்படுகின்றன. முன்று வெளிநாட்டுக் காசுகள் கிடைத்துள்ளன. இவை ரோமன்நாட்டைச் சார்ந்தனவாகும். இக்காசுகளின் ஒரு பக்கத்தில் வெற்றிக் கடவுளும், மறுபக்கத்தில் ரோமன் நாட்டின் அரசர் ஒருவரின் உருவமும் பொறிக்கப்பெற்றுள்ளன.

இவ்வாறு பழங்காலம் முதலே பெருமையுடன் இராமநாதபுர மாவட்டத்தில்அமைந்துள்ள அழகன் குளம் இருந்து வந்துள்ளது. தற்போது இதன் பெயர்அழகன்குளம் என மாறி உள்ளது. இதற்குக் காரணம் அழகர் கோயில் சார்புடையமக்கள் இங்குக் குடியேறிய போது இவ்வூருக்கு அழகன் குளம் என்ற பெயர்ஏற்பட்டிருக்கலாம் எனக் கருதப் பெறுகிறது.


தகவல்களுக்கு நன்றி: Tamilnation.org, tn.arc.in

செவ்வாய், 14 ஏப்ரல், 2009

சந்தான கோபால மந்த்ரம்

ஓம் தேவகி சுதா கோவிந்தா

வசுதேவ ஜெகத் பதே

தேஹிமே தனயம்

கிருஷ்ணா த்வமகாம்சரணம்

கத்தா தேவ தேவஜகன்னாத

கோத்ரா வறிதி கரப் பிரப்தோ

தேஹிமே தணயம் சீக்ரம்

ஆயுஷ்மந்தம் யஷஸ்ரீனம்