திருக்கோயில் காட்சிகள்

திங்கள், 5 அக்டோபர், 2009

அழகன் குளத்துக் கண்ணனின் அருள் போற்றும் பாசுரங்கள்

அழகன் குளத்து மணவாளன்

தென்புதுவைப் பட்டர்பிரான் வளர்த்த செல்வத்
திருமகட்கு மணவாளன் திருவாழ் மார்பன்
மன்பதையை
வாய்வழியே தாய்க்குக் காட்டி
மகிழ்வித்தோன் கோகுலத்தின் மானம் காத்தோன்
அன்புமனக் கோபியர்கள் கொஞ்ச வந்த
அழகுதிருப் பதிப்பெருமாள் சேது நாட்டோர்
இன்பமுற எழிலழகன் குளத்தை நாடி
இடங்கொண்டான் இவனடிகள் ஏத்தலாமே .
1

பச்சைநிறப் புல்வெளியும் கழனி நாற்றும்
பச்சிலையும் போல்மேனிப் பவள வாயன்
செச்சையணி முருகனுக்குச் சிறந்த மாமன்
சீருந்தித் தாமரையில் அயனை ஈன்றோன்
நச்சரவின் தலையாடி நம்மைக் காத்தோன்
நல்லழகன் குளம்தேடி அமர்ந்த நம்பி
இச்சையுடன் வணங்குபவர் இல்லம் தேடி
இருந்தருள்வான் இவனடிகள் ஏத்தலாமே .
2

கோவலர்தம் திருமனையில் நந்த கோபன்
குலவிளக்காய் வந்தமையால் ஆயர் பாடி
ஆவினங்கள் பால்பொழிய இல்ல மெல்லாம்
அது பெருகிப் பாற்கடலாய் ஆகி நிற்கக்
கோவியர்கள் பண்பாடக் கூடி யாடிக்
குழலூதி மகிழ்வித்த மாயக் கண்ணன்
தேவர்கட்கும் வாழ்வளித்த தெய்வக் கோமான்
தினங்காப்பான் இவனடிகள் ஏத்தலாமே .
3

மாதவனே இவ்வழகன் குளத்து வந்த
மாயவனே வானோடு நிலம ளந்த
யாதவனே பரந்தாமா எங்கள் கோவே
யதுகுலத்துச் சூரியனே நின்னை எண்ணி
மாதவங்கள் செய்பவர்தம் மால கற்றி
மாபெரிய பதமளிக்கும் மாயக் கண்ணா
ஏதவங்கள் செய்தாலும் எம்மைக் காக்கும்
ஏந்தலே நின்னடிகள் ஏத்தலாமே .
4

இம்மையொடு மறுமையிலும் இனித ளிப்பான்
என்றேத்தும் திருப்பதியான் இனிய பாதம்
செம்மைதரும் என்றெண்ணிச் சென்று காணச்
சேர்முத்துக் கருப்பரெனும் முகுந்த ரய்யா
தம்முடைய மனமறிந்த சீனி வாசன்
தானேவந் தவர்கனவில் வேங்க டத்தின்
இம்மண்ணைப் பிடிமண்ணாய் எடுத்துச் சென்றே
என்கோயில் அமையென்றான் அமைத்தார் அன்றே .
5


திருமலையான் ஒருமனதாய் உவந்து வந்தான்
திசைபுகழ்த் திகழ்அழகன் குளத்தன் ஆனான்
வருமக்கள் மூவருடன் கண்ண னுக்கும்
வழங்கினார் ஒருபகுதி ஆஸ்தி என்றே
மருமகனாம் மாரியப்பர் பெற்ற பேரன்
மகிழ்பத்ம நாபருமே மாணிக் கத்தின்
உருவாய்ந்த வேங்கடவன் திருவ டிக்கண்
உள்ளன்பு வாய்த்தவராய் ஒழுக லானார் .
6

தென்னகத்துத் திருப்பதியாய் அன்பர் போற்றத்
திகழ்அரியக் குடித்தலத்தில் கருடப் புள்ளான்
என்னாளும் அருளுதல்போல் இத்த லத்தில்
இருந்தருளைச் செய்கின்றான்
ஆஞ்ச நேயன்
தென்னாங்கூர் திருவரங்கம் முதலாய் உள்ள
திருத்தலங்கள் இருந்தருளும் தேவ தேவன்
எந்நாடும் புகழழகன் குளத்தை நாடி
எழுந்துவந்த இவன்புகழை ஏத்தலாமே .
7

அன்னவயல் சூழ்புதுவை ஆண்டாள் கொண்ட
அழகனிவன் திருவாழி வலத்தே வைத்தான்
மன்னவராம் பாண்டவர்க்காய் ஊது சங்கை
மாறியிடக் கைவைத்தான் சபையிற் கன்னி
தன்னுடைய மானத்தைக் காத்தான் வெற்றி
தான்ஐவர் பெறவைத்தான் கமலத் தாளைப்
பொன்னழகி காதலனைப் புகழ்ந்து வாழ்த்திப்
பொன்வில்லி மைத்துனனைப் போற்று வோமே .
8

திருமழிசைப் பிரான்தமிழைக் கேட்டுப் பின்னே
திகழரவப் பைசுருட்டிச் சென்ற மாயோன்
பெருமழையால் கோகுலமே வாடி டாமல்
பெருமலையைக் குடையாகப் பிடித்த மேலோன்
கருமைபோல் கடல்நிறம்போல் மேகம் போலக்
காண்மெய்யன் கனத்தமலை திருமெய் யத்தான்
இருமையிலும் அருள்சுரக்கும் எங்கள் அய்யன்
இவனடிகள் பவப்பிணிக்கு மருந்த தாமே .
9

கண்ணனையான் காகுத்தன் கரிய நம்பி
காவிரியும் கொள்ளிடமும் கால்தொட் டோடப்
பண் ஒழுகு தமிழ்கொண்டு பாடும் ஆண்டாள்
பத்தினியாய்ச் சேவிக்கப் பாரளந்தோன்
கண் ஒழுகு தமிழ்கொண்டு பாடும் ஆண்டாள்
கைதொழுதார் அவனிருக்கும் திசையை நோக்கி
விண்ணளந்த திருவடியை எண்ணி எண்ணி
வேளைதோறும் தொழுதிடுவார் வெற்றி காண்பார் .
10

1 கருத்து:

  1. தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

    அன்புடன்
    www.bogy.in

    பதிலளிநீக்கு