திருக்கோயில் காட்சிகள்

திங்கள், 5 அக்டோபர், 2009

அழகன் அந்தாதி பாசுரம்

அஞ்சன வண்ணன் எங்கள் அழகன்நற் குளத்து வேந்தன்
சஞ்சலப் பகைகள் போக்கும் சக்கரம் ஏந்து கையன்
அஞ்சனை பெற்ற மைந்தன் அனுமனின் தலைவன் ஆனோன்
மஞ்சினை ஒத்த மேனி மாயனே எம்மைக் காப்பாய் 1

காப்பவன் நீயே என்று காலடி பணிந்தோம் வாழ்க்கைத்
தோப்பினைக் காக்கும் தேவா தூயவள் யசோதை மைந்தா
பூப்படர் துளவத் தோளாய் பொன்மகள் சேர்ந்த மார்பா
நாப்படர் தமிழி னாலே நாம்தரும் வணக்கம் ஏற்பாய் 2

பாயெனப் பாம்பு கொண்டாய் பைந்தமிழ் ஆழ்வார் சொல்லத்
தூயவ தொடர்ந்து போனாய் தூதென நடந்து போனாய்
தீயவர் கவுர வர்க்குத் தீயென ஆன தேவா
மாயவா முகுந்தா உன்றன் மலரடி தலைமேற் கொண்டோம் . 3

கொண்டவள் கோதை என்று கும்பிட மகிழும் எங்கள்
கொண்டலே உனது பாதம் கும்பிடல் எமது வேதம்
தண்டலை சூழ்ந்து காணும் தனிப்பெரும் வேங்க டத்தில்
அண்டர்கள் வணங்க நின்ற அமலனே வாழ்த்து வாய்நீ . 4

நீயிலை என்று சொன்னால் நிமலனே உலகம் ஏது
தாயெனப் பூமி தாங்கும் தலைநான் குடைய தேவைத்
தூயதோர் அயனை ஈன்று தொல்புவி காக்க நான்தான்
சேயென வந்த செல்வா சிந்தையில் நிறைந்தாய் அன்றோ . 5

அன்றிலோ(டு) அன்னம் சூழும் அழகிய வாவி வந்து
கொன்றிடும் பாம்பின் மேலே கூத்தினைச் செய்த கோவே
தின்றிடும் வினைகள் நீக்கும் திருப்பதி பெருமாள் உன்னை
இன்றியாம் பணியக் கண்டே இன்னருள் சுரந்தால் என்ன? 6

என்னநாம் செய்வோம் அய்யா நின்னருள் இல்லா விட்டால்
அன்னையாய்த் தந்தை யாகி அனைத்துமாய் ஆன வள்ளல்
பொன்னடி என்றும் எம்மைப் புனிதராய் ஆக்கக் கண்டோம்
மன்னவர் வணங்கும் உன்றன் மலரடி பணியக் காண்பாய் . 7

காண்பதற்(கு) எளியை ஆகிக் கவினுறு துளவத் தொங்கல்
பூண்பவன் உன்னை அந்தப் பொற்றொடிக் கோதை நாச்சி
மாண்பமை மாலை சூட்டி மணந்தவள் கரங்கள் பற்றி
வீண்வினை போக்க வந்த வித்தகன் நாமம் வெல்க . 8

கவின்பெறு சேது நாட்டின் கண்ணென விளங்க வந்தான்
அவனடி வைத்த மண்ணார் அழகன்நற் குளத்தில் வந்து
தவமுடைச் செல்வர் எல்லாம் தாளினைப் பணிதல் வேண்டி
நவமுயர் கோயில் கண்டார் நாரணன் நலமே செய்தான் . 9

செய்யவள் கேள்வன் உன்னைச் சேர்ந்தவர் வீடு பெற்றார்
வெய்யபோர்க் களத்தில் நின்ற பாண்டவர் நாடு பெற்றார்
பொய்யிலா முனிவர் எல்லாம் பொன்னடி காணப் பெற்றார்
அய்யனே உன்னைப் போற்றும் அடியவர் அஞ்சு வாரோ ! 10

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக