திருக்கோயில் காட்சிகள்

திங்கள், 5 அக்டோபர், 2009

அழகன் குளத்து அஞ்சன வண்ணன்

செய்ய திருமாலே சீருடையார் போற்றுதிரு
மெய்ய மலையானே மேன்மைமிகு -வையமொடு
விண்ணளந்த தாளாய் அழகன் குளமுவந்தாய்
எண்ணத்தில் என்றும் இரு.
1

மன்னுதமிழ்க் கோதை மலர்க்கரமாம் தாமரைகள்
தன்னையே பற்றியவா தண்கமலப் -பொன்னாள்
உவந்திருக்கும் மார்பனே உன்னடியே என்றும்
சிவந்திருக்கும் எந்தலைகள் சேர்ந்து
2

காட்டிலே பாண்டவர்க்குக் காவலென நின்றவனே
நாட்டிலே தூதாய் நடந்தவனே -தாட்டா
மரைகாட்டித் தாரணியில் ஆட்கொண்ட மன்னா
விரைவோடு காப்பாய் விழைந்து .
3

முத்துக் கருப்ப முகுந்தர் பணிசெய்ய இவ்வுலகில்
பத்தாம் அவதாரம் பார்த்தவா -கத்தும்
கடல்சேர் அரவணையில் கண்வளர்வாய் நெஞ்சின்
இடரகற்றிக் காக்க எழு .
4

ஆயர் குலத்தமுதே ஆண்டாள் திருக்கேள்வா
தாயாம் யசோதை தான்மகிழச் -சேயாய்
வளர்ந்த திருமாலே வானமுதே வையம்
அளந்தோனே முன்னின் றருள்
5

தேசுடையாய் நெஞ்சில் திருவுடையாய் என்றுமெமை
மாசடையா வண்ணம் மகிழ்ந்தளிப்பாய் -பாசுரங்கள்
போற்றும் திருப்பதியாய் பொன்வண்ணச் சீருடையாய்
ஏற்றுக் களிப்பாய் இனி .
6

பாதங்கள் செய்வார் படவைத்தாய் அன்றிலங்கை
மாதகனம் செய்தான் மனத்திருந்தாய் -நீதான்
அழகன் குளப்பதிமேல் அன்புவைத்தாய் என்றும்
மழைபொழிய வைப்பாய் மனம் .
7


ஆவின் நிறைகாத்த அஞ்சன வண்ணத்தாய்
பாவில் மனம்வைத்தாய் பாற்கடலாய் -சேவேறும்
அண்ணலுக்கு மைத்துனா ஆலிக்கும் ஆழிமழைக்
கண்ணாவுன் காலடியே காப்பு .
8

நெல்லேறும் சோலைத் திருவரங்கம் மேயோனே
சொல்லேரும் பாக்கள் சுவைத்தோனே -வில்லேறும்
தோளானே எங்கள் துணைவா என்றுமுமக்(கு)
ஆளானோம் ஈவாய் அருள் .
9

அன்பாலே வந்தாய் அழகன் குளத்தமர்ந்தாய்
மன்பாரம் தீர்த்திட்ட மாதவா -உன்பாரம்
எம்மையே காப்பாற்றல் என்றிங்கே தாள்பணிந்தோம்
உம்மையன்றி யாரே உளர்?
10

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக